மோசமாகியுள்ள வானிலையால் தொடர்ந்து  அதிகரிக்கும்
சேதங்கள்


தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஏற்பட்ட மோசமான வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

17 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


100 மில்லிமீற்றருக்கும் அதிகமாக பதிவாகும்  மழைவீழ்ச்சி

வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும்.

ஏனைய பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

ஏனைய இடங்களில் காற்று மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

பலத்த மலையுடன் கூடிய  பலத்த காற்று 

இந் நிலையில்,தென்மேற்கு வங்காள விரிகுடாவில் அதிகாலை 2:30 மணி நிலவரப்படி திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டிருந்தது.

இது, வடக்கு-வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, கிழக்கு கடற்கரையை நெருங்கி, புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வானிலை அமைப்பின் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்கு மிக பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

வீடுகள் முற்றாக சேதம்

புத்தளம், பதுளை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலேயே மரணங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயற்கை அனர்த்தம் காரணமாக, 98,635 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 330,894 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 5,305 குடும்பங்களைச் சேர்ந்த 16,553 பேர் நாடு முழுவதும் 183 பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

21 மாவட்டங்களில் 267 பிரதேச செயலகப் பிரிவுகளில் பலத்த காற்று, வெள்ளம், மரங்கள் சரிவு மற்றும் மண்சரிவு காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 82 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 1,465 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 17,635 குடும்பங்களைச் சேர்ந்த 59,997 பேர் தமது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

Post a Comment

0 Comments