கலம்பகம்

 கலம்பகம்

தமிழ் மொழியில் காணப்படும் மற்றொரு இலக்கிய வகையாகிய கலம்பகம் என்பது பற்றிப் பார்ப்போம்.

2.6.1 பெயர்க்காரணம்

கலம்பகம் என்பதற்குக் கலவை என்ற பொருளும் உண்டு. சங்க நூல்களில் ஒன்று பெரும்பாணாற்றுப்படை. இந்நூலில்,

பல்பூ மிடைந்த படலைக் கண்ணி (174)

(பல் = பல; பூ = பூக்கள்; மிடைந்து = கலந்து)

என்று ஓர் அடி வருகின்றது. இதற்கு, பலவாகிய பூக்கள் கலந்து கட்டப்பட்ட கலம்பக மாலை என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறுகின்றார். பல பூக்களைக் கலந்து கட்டிய மாலை. ஆகையால் கலம்பக மாலை என்கிறார்.
இப்பொழுது நாம் பல வகையான பூக்களைச் சேர்த்துக் கட்டிய மாலையைக் கதம்பம் என்கிறோம். இதுவே கலம்பகம் என்று வழங்கப்பட்டது எனலாம்.
பல்வேறு பூக்களால் ஆன மாலை கலம்பகம் எனப்படுகிறது. அதுபோலப் பல்வேறு உறுப்புக்களைக் கலந்து இயற்றிய நூல் கலம்பகம் என்று அழைக்கப்படுகின்றது எனலாம். நவநீதப் பாட்டியல், கலந்து பாடுவது கலம்பகம் என்கின்றது.

• கலம்பகம் - சொல் அமைப்பு
கலம்பகம் என்ற சொல் இரண்டு சொற்களின் கூட்டு ஆகும். கலம்பு + அகம் = கலம்பகம் என்றும், கலம் + பகம் = கலம்பகம் என்றும் இந்தச் சொல்லைப் பிரிக்கலாம். பல்வேறு வகையான உறுப்புகள் இந்த இலக்கிய வகையில் அகத்தே - உள்ளே - கலந்து வருவதால் கலம்பகம் என்று அழைக்கப்படுகின்றது.

கலம் என்றால் 12 என்று பொருள். பகம் என்றால் பகுதி அல்லது பாதி என்று பொருள். இங்கும் பன்னிரண்டின் பகுதி ஆறு ஆகும். எனவே, 12 + 6 = 18. இந்த இலக்கிய வகையில் 18 உறுப்புகள் கலந்து வருவதால் கலம்பகம் என்று பெயர் பெறுகின்றது எனலாம்.

2.6.2 தோற்றமும் வளர்ச்சியும்
கலம்பக இலக்கிய வகையின் உறுப்புகள் பல தொல்காப்பியத்தில் இடம் பெறக் காணலாம். அம்மானை, ஊசல், காலம், வண்டு, கைக்கிளை, பாண், தழை, இரங்கல், குறம், தூது என்ற கலம்பக உறுப்புகள் தொல்காப்பிய அகத்துறை சார்ந்தவை ஆகும். இனி, மறம், புயம் என்பன தொல்காப்பியப் புறத்துறை சார்ந்தவை ஆகும். இவை பற்றிப் பின்னால் காணலாம். இவ்வாறு, தொல்காப்பிய அகத் துறையிலும் பாடிய நிலையில் கலம்பகம் என்ற இலக்கிய வகை தோன்றியது எனலாம்.
• முதல் நூல்
கலம்பக இலக்கிய வகையின் முதல் நூல் நந்திக்கலம்பகம் ஆகும். இந்நூலின் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. இந்த நூலின் பாட்டுடைத் தலைவன் மூன்றாம் நந்திவர்மன் என்ற மன்னன் ஆவான். இந்த நூலைத் தொடர்ந்து பல கலம்பக நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.

2.6.3 உறுப்புகள்
கலம்பக இலக்கிய வகையின் இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்கள் பிரபந்த மரபியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம், பிரபந்த தீபிகை ஆகிய பாட்டியல் நூல்கள் பதினெட்டு உறுப்புகளைச் சுட்டுகின்றன. ஆனால், இந்த உறுப்புகளிடையே வேறுபாடுகளும் காணப்படுகின்றன. எனவே, அவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் கலம்பக உறுப்புகள் புயம், அம்மானை, ஊசல், களி, மறம், சித்து, காலம், மதங்கி, வண்டு, மேகம், சம்பிரதம், தவம், பாண், கைக்கிளை, ஊர், தழை, இரங்கல், தூது, குறம், தென்றல் என்ற இருபது என்பது தெரிய வருகின்றது.

• உறுப்புகளின் பிற்கால வளர்ச்சி
பாட்டியல் நூல்களின் ஆசிரியர்கள் தம் காலத்தில் காணப்பட்ட கலம்பக நூல்களைப் பார்த்தே இலக்கணம் கூறியுள்ளனர். ஆனால், இலக்கியங்களை இயற்றும் புலவர்கள் தம் புலமைத் திறனையும் கற்பனைத் திறனையும் இடம் பெறச் செய்வர். எனவே, பிற்காலத்தில் தோன்றும் இலக்கியங்கள், முன்பு கூறிய இலக்கண விதிகளிலிருந்து சிறிது மாறுபட்டுக் காணப்பட வாய்ப்பு உள்ளது. இவ்வகையில், பாட்டியல் நூல்கள் கூறும் கலம்பக இலக்கிய வகையின் உறுப்புகளில் சில மாற்றங்கள் பிற்காலத்தில் ஏற்பட்டுள்ளன. எனவே, பிற்காலத்தில் தோன்றிய கலம்பக இலக்கிய வகை நூல்களில் ஆற்றுப்படை, இடைச்சியார், கீரையார், வலைச்சியார், கொற்றியார், பிச்சியார், யோகினியார், பள்ளு, மடக்கு, வெறிவிலக்கல், பாத வகுப்பு என்பன உறுப்புகளாக அமைந்துள்ளமையை அறிய முடிகின்றது.

• பதினெட்டுக்கும் குறைவான உறுப்புகள்

பொதுவாகக் கலம்பக உறுப்புகள் பதினெட்டு என்று கூறப்படும் நிலை உள்ளது. சில நூல்களில் பதினெட்டுக்கும் அதிகமான உறுப்புகள் காணப்படுகின்றன. இதைப் போன்றே சில கலம்பக நூல்களில் பதினெட்டுக்கும் குறைவான உறுப்புகள் இடம் பெறக் காணலாம். சான்றுகளாக ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், தில்லைக் கலம்பகம் என்பனவற்றைக் கூறலாம்.

2.6.4 சிறப்புகள்

கலம்பகம் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. எனினும் அது பல சிறப்புகளைக் கொண்டதாகத் திகழ்கின்றது. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.

கலம்பக இலக்கியத்தில் பல்வேறு உறுப்புகள் கலந்து வருவதால் அது பல்சுவை உடையதாக விளங்குகின்றது.

கலம்பகம் வேறு சில சிற்றிலக்கிய வகைகளின் கூறுகளையும் உள்ளடக்கியதாக விளங்குகிறது. சான்றாகக் கலம்பக நூலில் தூது,

சமுதாயத்தில் வாழ்கின்ற சாதாரண மக்களைப் பற்றிய உறுப்புகளையும் கலம்பகம் கொண்டுள்ளது. சான்றாக மதங்கியார், இடைச்சியார், வலைச்சியார் ஆகிய உறுப்புகளைக் கூறலாம்.

கலம்பகம் நாட்டுப்புற இலக்கியக் கூறுகளும் புலமை இலக்கியக் கூறுகளும் கலந்த கலவையாக உள்ளது.

கலம்பக நூல்கள் சில வரலாற்றுச் செய்திகளை வெளிப்படுத்தக் காணலாம். எடுத்துக்காட்டு - நந்திக்கலம்பகம்.

கலம்பகம் அகப்பொருளும் புறப்பொருளும் கலந்த கலவையாகவும் உள்ளது.

பல சமயப் புலவர்களாலும் பாடப்பட்ட சிறப்புடையதாய் விளங்குகின்றது.


கலம்பக நூல்கள்

ஆளுடையப் பிள்ளையார் திருக்கலம்பகம்

நந்திக் கலம்பகம்

காசிக் கலம்பகம்

திருவரங்கக் கலம்பகம்

மதுரைக் கலம்பகம்

வீரகேரளம்புதூர் நவநீதகிருட்டிணன் கலம்பகம்

திருக்கண்ணபுரக் கலம்பகம்

திருவருணைக் கலம்பகம்

திருக்காவலூர்க் கலம்பகம்

தில்லைக் கலம்பகம்

மறைசைக் கலம்பகம்

அருணைக் கலம்பகம்

கதிர்காமக் கலம்பகம்

கச்சிக் கலம்பகம்

வெங்கைக் கலம்பகம்

புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம்

திருவாமாத்தூர்க் கலம்பகம்


Post a Comment

0 Comments